மதுரை மாவட்டத்தின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மேலூர் தொகுதியில், கடந்த கால் நூற்றாண்டு காலமாக நீடித்து வந்த அதிமுகவின் ஆதிக்கத்திற்கு காங்கிரஸ் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. 2001-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து அதிமுக வசமிருந்த இந்தத் தொகுதியை, 25 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் வேட்பாளர் பெ.விஸ்வநாதன் அதிரடியாகக் கைப்பற்றியுள்ளார். கடும் போட்டிகளுக்கு இடையே நடைபெற்ற இந்தத் தேர்தல் போரில், விஸ்வநாதன் மொத்தம் 60,080 வாக்குகளைப் பெற்று, 2,724 வாக்குகள் வித்தியாசத்தில் ஒரு திரில் வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

​இந்தத் தொகுதியில் இரண்டாம் இடத்தை நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் மதுரை வீரன் பிடிக்க, இத்தனை காலம் இங்கேயே தவம் கிடந்த அதிமுக மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டது ஒட்டுமொத்த அரசியலையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. முன்னாள் எம்.பி-யான பெ.விஸ்வநாதன், அதிமுகவின் கோட்டையைத் தகர்த்து காங்கிரஸின் கையை மேலோங்கச் செய்திருப்பது, அந்த மாவட்ட காங்கிரஸ் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் மாவட்ட அரசியலில் மேலூர் மீண்டும் காங்கிரஸின் வசமானது ஒரு முக்கியத் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.