இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கின் தந்தை காலமான துக்கத்தில் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் ஆழ்ந்துள்ள நிலையில், இந்திய அணியின் மற்ற வீரர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்த வீடியோ ஒன்று கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரிங்கு சிங்கின் தந்தை, புற்றுநோய் பாதிப்பால் வெள்ளிக்கிழமை காலமானார். இந்தத் துயரச் செய்தியைக் கேட்டு ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். ரிங்கு சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் இந்த இக்கட்டான சூழலில் இருக்கும்போது, சக வீரர்களின் செயல் ரசிகர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது.
இந்தச் சோகமான சூழலில், இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் அக்ஷர் படேல் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் ஜஸ்பிரித் பும்ராவைக் கிண்டல் செய்வது போன்ற ஒரு நகைச்சுவையான வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோவில் முகமது சிராஜுடன் அவர்கள் ஜாலியாக உரையாடுவதும் பதிவாகியுள்ளது.
Camera-friendly Siraj Bhai haazir hai 📸😎 pic.twitter.com/WvV73JKwGy
— Gujarat Titans (@gujarat_titans) February 27, 2026
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, “உடன் விளையாடும் வீரரின் குடும்பத்தில் மரணம் நிகழ்ந்து 24 மணி நேரம் கூட ஆகாத நிலையில், இப்படிப் பொறுப்பற்ற முறையில் வீடியோ வெளியிடுவதா?” எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இது குறித்து இணையவாசிகள் “கொஞ்சமாவது வெட்கப்படுங்கள். ரிங்கு சிங்கின் தந்தை மறைந்து ஒரு நாள் கூட ஆகவில்லை, அதற்குள் ரீல்ஸ் செய்வதில் பிஸியாக இருக்கிறீர்களா?” என்று ஒரு பயனர் சாடியுள்ளார். மற்றொருவர், “உண்மையிலேயே உங்கள் சக வீரரின் இழப்பில் உங்களுக்கு வருத்தம் இருந்தால், இந்த நேரத்தில் இத்தகைய செயல்களில் ஈடுபட்டிருக்க மாட்டீர்கள். இது மிகவும் ஏமாற்றமளிக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் கிரிக்கெட் வீரர்கள் தங்களது தனிப்பட்ட நட்பைப் பேணுவது இயல்பானது என்றாலும், ஒரு சக வீரரின் துயரமான நேரத்தில் இத்தகைய பொதுவெளிப் பதிவுகள் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் குமுறலாக உள்ளது.
