இந்தியக் கிரிக்கெட்டின் சிகரம் எனப்படும் ரஞ்சிக் கோப்பை (2025-26) தொடரின் இறுதிப்போட்டியில், பலமுறை சாம்பியன் பட்டம் வென்ற பலம் வாய்ந்த கர்நாடக அணியை வீழ்த்தி, ஜம்மு-காஷ்மீர் அணி முதல்முறையாக மகுடம் சூடியுள்ளது. 66 ஆண்டுகளாக ரஞ்சிக் கோப்பைத் தொடரில் விளையாடி வரும் ஜம்மு-காஷ்மீர் அணி, வரலாற்றில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றதோடு மட்டுமல்லாமல், கோப்பையையும் வென்று ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பாராட்டி, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் முழுவதும் ரசிகர்கள் வீதிகளில் இறங்கி கொண்டாடி வருகின்றனர். அனுபவம் வாய்ந்த கர்நாடக வீரர்களின் வியூகங்களை உடைத்தெறிந்து, இளம் ரத்தங்களின் அசுர வேக ஆட்டத்தால் இந்த இமாலய வெற்றி சாத்தியமாகியுள்ளது. இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டில் ஒரு கறுப்பு குதிரையாக உருவெடுத்துள்ள ஜம்மு-காஷ்மீர் அணியின் இந்த ‘மாஸ்’ வெற்றி, அந்த மாநில கிரிக்கெட் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கியுள்ளது.
