உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தின் கிராமப்புறங்களில் சிறுத்தைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
காந்த் பகுதியில் உள்ள மிஷ்ரிபூர் கிராமத்தில், தனது வீட்டின் முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த தீபான்ஷி என்ற 10 வயது சிறுமியைச் சிறுத்தை ஒன்று திடீரெனத் தாக்கி, கரும்புத் தோட்டத்திற்குள் இழுத்துச் சென்றுள்ளது.
அந்த நேரத்தில் அங்கிருந்த சிறுமியின் சகோதரர் விஷால் சத்தமிடவே, கிராம மக்கள் திரண்டு வந்து சிறுத்தையை விரட்டிச் சிறுமியை மீட்டனர். பலத்த காயமடைந்த தீபான்ஷி தற்போது மாவட்ட மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் குழந்தைகள் மீது நடத்தப்படும் இரண்டாவது தாக்குதல் இது என்பதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். ஏற்கனவே பலமுறை புகார் அளித்தும் வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கிராம மக்கள் கொந்தளித்துள்ளனர்.
