கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூர் அருகே, மொபைல் போன் திருடியதாக ஏற்பட்ட சந்தேகத்தில் அசாமைச் சேர்ந்த 25 வயது இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரும்பாவூரில் உள்ள ஒரு தனியார் பிளைவுட் (Plywood) நிறுவனத்தில் பணியாற்றி வந்த அந்த இளைஞர், சக தொழிலாளர்களின் மொபைல் போனைத் திருட முயன்றதாகக் கூறப்படுகிறது. இந்தச் சந்தேகத்தின் அடிப்படையில், ஏப்ரல் 1-ம் தேதி காலை ஆறு பேர் கொண்ட கும்பல் அந்த இளைஞரைத் தனி அறையில் வைத்து சரமாரியாகத் தாக்கியுள்ளது.

இதில் பலத்த காயமடைந்த இளைஞரை, தாக்குதல் நடத்தியவர்களே மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த பெரும்பாவூர் போலீசார், உயிரிழந்த இளைஞரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வந்த 6 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

எவ்வித ஆதாரமும் இன்றி திருட்டுச் சந்தேகத்தில் ஒரு இளைஞரின் உயிரைப் பறித்த இந்த  சம்பவம் கேரளா முழுவதும் பலத்த கண்டனங்களைப் பெற்றுள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகு, இது திட்டமிட்ட கொலையா அல்லது ஆத்திரத்தில் நடந்ததா என்பது குறித்து முழுமையான விவரங்கள் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.