தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ள நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியும், அதிமுக – பாஜக கூட்டணியும் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன.

இந்தச் சூழலில், நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ (தவெக) என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி, 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்து அரசியல் பணிகளை தொடங்கியுள்ளார். மக்களை சந்திக்கும் நிகழ்வுகளின் போது, தமிழக அரசியல் களத்தில் திமுக – தவெக இடையில்தான் நேரடி போட்டி நடைபெறும் என விஜய் தொடர்ந்து தெரிவித்து வருகிறார். இதனால், வரும் தேர்தலில் அவர் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

ஆரம்பத்தில், நடிகர் விஜய் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாக பேசப்பட்டது. ஆனால், பாஜக-வுடன் கூட்டணி இல்லை என விஜய் திட்டவட்டமாக அறிவித்ததைத் தொடர்ந்து, அதிமுக கூட்டணியில் அவர் இணையும் வாய்ப்பு இல்லை எனக் கருதப்படுகிறது. மேலும், தவெக சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக விஜயே அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியும் தவெக-வுடன் கூட்டணி அமைக்க விருப்பம் காட்டவில்லை என கூறப்படுகிறது.

இந்தப் பின்னணியில், அதிமுக மற்றும் பாஜக தரப்பிலிருந்து நடிகர் விஜயையும், அவரது கட்சியையும் விமர்சிக்கும் குரல்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், நடிகர் விஜயை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்தியாவையே நாளை பிடித்துவிடுவேன் என்று கூட விஜய் சொல்லலாம்.

ஆனால், இது சினிமா அல்ல. தமிழக வெற்றிக் கழகத்திற்கு எந்த கட்டமைப்பும் இல்லை. மொத்தம் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 10 வேட்பாளர்களின் பெயர்களையாவது விஜயால் சொல்ல முடியுமா?” என விமர்சனம் செய்துள்ளார். மேலும் நயினார் நாகேந்திரனின் இந்த கருத்து, தமிழக அரசியல் வட்டாரங்களில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.