மகாராஷ்டிர மாநிலம் வாஷிம் பகுதியில் கடந்த 2004 ஆம் ஆண்டு நடந்த ஒரு பரபரப்பான கொலை வழக்கில், சுமார் 22 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த பஞ்சசீலா தோரட் என்ற பெண் தற்போது குஜராத்தில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2000 ஆம் ஆண்டில் பஞ்சசீலா தோரட்டும், மாதவ் சதாசிவ் கோட்டே என்ற இளைஞரும் காதலித்து, வீட்டை விட்டு வெளியேறி ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். திருமண ஆசை காட்டி மாதவ் தன்னுடம் உடல் ரீதியான தொடர்பு வைத்திருந்ததாகவும், ஆனால் பின்னர் தன்னை ஏமாற்றிவிட்டு பிரிந்து சென்றதாகவும் பஞ்சசீலா காவல்துறையில் புகார் அளித்தார்.
Washim, Maharashtra: In a major breakthrough in a 22-year-old murder case, Washim Police have arrested the accused woman from Gujarat. The accused, Panchshila Thorat, had changed her identity, moved to another state, stopped using a mobile phone, and started a new life after… pic.twitter.com/nR9llEd0q6
— IANS (@ians_india) July 17, 2026
“>
மேலும், புகாருக்குப் பின்னரும் மாதவ் தன்னைத் தொடர்ந்து அச்சுறுத்தி, துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில், கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூன் 25 அன்று மாதவ் தூங்கிக் கொண்டிருந்தபோது, பஞ்சசீலா அவரது கழுத்தில் கத்தியால் குத்தியும், தலையில் கல்லைப்போட்டும் கொடூரமான முறையில் கொலை செய்தார்.
இந்தக் கொலைச் சம்பவத்திற்குப் பிறகு வாஷிம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பஞ்சசீலா, சுமார் 6 மாதங்கள் சிறையில் இருந்த பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து அவர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோது, அவரது தண்டனை 10 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வந்ததை அறிந்த பஞ்சசீலா, சிறைக்குச் செல்ல அஞ்சி மகாராஷ்டிராவை விட்டு உடனடியாகத் தலைமறைவானார். காவல்துறையினரின் பார்வையில் படாமல் இருக்க அவர் குஜராத் மாநிலத்திற்குத் தப்பிச் சென்றார்.
குஜராத் சென்ற பஞ்சசீலா அங்கு ஒரு குஜராத்தி நபரைக் திருமணம் செய்து, ஒரு குடும்பத்தைத் தொடங்கிப் புதிய வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். குற்றம் நடந்தபோது அவருக்கு வெறும் 20 வயதுதான் என்பதால், 22 ஆண்டுகள் கடந்த பிறகு அவருடைய தற்போதைய அடையாளத்தைக் கண்டறிவது காவல்துறைக்கு பெரும் சவாலாக இருந்தது.
இருப்பினும், பஞ்சசீலாவின் கணவர் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்த ஒரு குடும்பப் புகைப்படத்தின் மூலம் வாஷிம் சைபர் பிரிவு போலீசாருக்கு முக்கியத் துப்பு கிடைத்தது. அந்தப் புகைப்படத்தில் இருந்த பெண்ணின் முகத்தை வைத்து காவல்துறையினரின் உதவியுடன் தனிப்படை போலீசார் பஞ்சசீலாவைத் துல்லியமாகக் கண்டறிந்து அதிரடியாகக் கைது செய்தனர்.
