இந்திய அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக இளைஞர்களின் தீவிரப் போராட்டத்திற்குப் பணிந்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். உச்சநீதிமன்ற நீதிபதியால் கரப்பான்பூச்சி என்று விமர்சிக்கப்பட்டதை தங்களின் அடையாளமாக மாற்றி, ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ என்ற பெயரில் இளைஞர்கள் நடத்திய ஒரு மாத காலப் போராட்டமே இந்த அதிரடி மாற்றத்திற்குக் காரணமாக அமைந்தது.
மாணவர்களின் இந்த பிரம்மாண்ட எழுச்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் புதிய கல்வி அமைச்சராகப் பிரகலாத் ஜோஷியை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.கர்நாடக மாநிலம் தார்வாட் தொகுதியிலிருந்து தொடர்ந்து ஐந்து முறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 63 வயதாகும் பிரகலாத் ஜோஷி, தற்போது உணவுப்பொருள் வழங்கல் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சராகப் பணியாற்றி வருகிறார்.
கடந்த 2019 முதல் 2024 வரை நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் நிலக்கரித் துறை அமைச்சராகச் செயல்பட்டு பிரதமர் மோடியின் நம்பிக்கையைப் பெற்ற இவருக்கு, தற்போது கல்வித்துறையும் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளைச் சமாளிப்பதிலும் நெருக்கடிகளைக் கையாளுவதிலும் இவர் மிகவும் வல்லவர்.புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பிரகலாத் ஜோஷிக்கு முன்னால் நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தால் மாணவர்கள் இழந்த நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுக்க வேண்டிய மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது.
பதவியேற்ற பின்பு பேசிய அவர், பிரதமர் தன் மீது வைத்துள்ள நம்பிக்கையைப் பூர்த்தி செய்து நேர்மையுடன் கடமையாற்றுவேன் என்று உறுதியளித்துள்ளார். மேலும், பதவி விலகிய தர்மேந்திர பிரதானின் திட்டங்களைப் பாராட்டியுள்ள அவர், நாட்டின் கல்வி வளர்ச்சிக்காகத் தங்களின் பயணம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தப் போராட்டத்தால் ஏற்பட்டுள்ள இந்த அரசியல் மாற்றம், இந்தியக் கல்வி முறையில் புதிய வெளிப்படைத்தன்மையையும் நம்பிக்கையையும் கொண்டுவருமா என்பதை நாடு முழுவதிலும் உள்ள இளைஞர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்
