2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) தொகுதிக்கான வேட்பாளராக கல்யாணசுந்தரத்தை நாதக கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தது கட்சியினரிடையே புதிய இடையூறுகளை உருவாக்கியுள்ளது. இதை எதிர்த்து, நாதக சார்பில் முக்கிய பொறுப்பில் இருந்த 20க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகி திமுக-வில் இணைந்துள்ளனர்.

கடந்த ஜூன் மாதம், தூத்துக்குடியில் கள் இறக்க அனுமதி கோரி நடந்த போராட்டத்தில், சீமான் ஒரு பனைமரத்தில் ஏறி கள் இறக்கியது பெரும் விவாதத்திற்குள்ளானது. இதனை கண்டித்து புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, “சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; நாதக கட்சி தடை செய்யப்பட வேண்டும்” என்றார்.

அதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் மாதம் தேனியில், தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தின் பட்டியல் வெளியேற்ற கோரிக்கையை வலியுறுத்திய பொதுக்கூட்டத்தில், நாதக நிர்வாகியான கல்யாணசுந்தரம், டாக்டர் கிருஷ்ணசாமியையும், அவரது குடும்பத்தினரையும் கடுமையாக விமர்சித்தார். இந்த மேடையிலேயே, அவரின் செயலால் மகிழ்ச்சியடைந்த சீமான், அவரையே ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிக்கான வேட்பாளராக அறிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஸ்ரீவில்லிபுத்தூர் நாதக நிர்வாகிகள், வேட்பாளர் மாற்ற கோரிக்கை வைத்தனர். அதையடுத்து நடைபெற்ற ஆலோசனையில், “கல்யாணசுந்தரம்தான் வேட்பாளர்; என் முடிவை ஏற்க முடியாவிட்டால், கட்சியை விட்டு வெளியேறலாம்” என சீமான் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் பின்னணியில், நாதக தகவல் தொழில்நுட்ப பாசறையின் மாநில இணைச் செயலாளர் சுபாஷ், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் முன்னிலையில் திமுக-வில் இணைந்தார். பின்னர், மாநில வழக்கறிஞர் பாசறை இணைச் செயலாளர் பிரபாகர் மூர்த்தி, குருதிக்கொடை பாசறை செயலாளர் ராமராஜ் உள்ளிட்டோர் தங்களது ஆதரவாளர்களுடன் திமுக-வில் இணையத் தொடங்கினர்.

தற்போது, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மற்ற நாதக நிர்வாகிகளையும் திமுக-வில் இணைக்க முயற்சி நடைபெற்று வருகிறது. இது குறித்து பேசிய பிரபாகர் மூர்த்தி, “2016-ல் கல்யாணசுந்தரம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் 3,833 வாக்குகள் மட்டுமே பெற்றார். அதற்குப் பிறகு நாதக-வை விட்டு விலகி, ‘தமிழர் விடுதலை மீட்புக் களம்’ என்ற அமைப்பை தொடங்கினார். தொடர்ந்து பிற்படுத்தப்பட்ட சமூகங்களை விமர்சித்து வந்தவர். பல்வேறு தேர்தல்களில் வேறு கட்சிகளுக்கு ஆதரவாக செயல்பட்டவர். இப்படி நிலைத்துவிடாத ஒருவரை வேட்பாளராக அறிவிப்பது தவறு. அதனை ஒப்புக்கொள்ள முடியாததால், நாங்கள் விலகியுள்ளோம்” என்றார்.

இதுகுறித்து கல்யாணசுந்தரமும் பதிலளித்துள்ளார். “நான், அண்ணன் சீமான் உத்தரவுப்படி தேர்தல் பணிகளைத் தொடங்கி இருக்கிறேன். சிலர் எனக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், அது கட்சியின் கொள்கையை பாதிக்காது. 2021-ல் நாங்கள் பெற்ற 25 ஆயிரம் வாக்குகள் என் தனிப்பட்ட புகழுக்காக அல்ல; கட்சிக்கே கிடைத்தது. திமுக-வில் இணைந்தவர்கள், நாதக கொள்கைக்கு எதிராகப் போகிறார்கள். இது அவர்களது சொந்த முடிவாகும்” என்றார். மேலும் நாம் தமிழர் கட்சியிலிருந்து ஏற்கனவே நிர்வாகிகள் சமீப காலமாக விலகி வரும் நிலையில் தற்போது மீண்டும் விலகி உள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.