தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திமுகவை அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் எதிர்கொள்ள அதிமுக மற்றும் பாஜக கூட்டணி தீவிரமான வியூகங்களை வகுத்து வருகின்றன.
சமீபத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சந்திப்பின் போது, திமுக அரசின் மீது கூறப்படும் ஊழல் புகார்கள் அடங்கிய பட்டியலை இபிஎஸ் வழங்கியதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, மேற்கு மண்டலத்தில் திமுகவின் தேர்தல் பணிகளை முன்னின்று கவனிக்கும் செந்தில் பாலாஜிக்கு எதிராக மீண்டும் சட்ட ரீதியான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதன் மூலம், திமுகவின் தேர்தல் வியூகங்களை முடக்க அமித் ஷா தலைமையிலான பாஜக தலைமை திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது.
இதனால் மறுபுறம், ஒரு ஆண்டுக்கும் மேலான சிறைவாசத்திற்குப் பிறகு வெளியே வந்துள்ள செந்தில் பாலாஜி, தற்போது திமுகவின் மேற்கு மண்டல பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு சுமார் 60 தொகுதிகளில் தீவிர தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளார்.
மேலும் அவருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த முக்கியத்துவத்தைக் குறைக்கவும், விசாரணை அமைப்புகளின் மூலம் அவருக்கு மீண்டும் அழுத்தம் கொடுக்கவும் எதிர்க்கட்சிகள் முயற்சித்து வருகின்றன. ‘டெல்லியைப் போல தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று கூறியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர்கள் கூறி வரும் நிலையில், செந்தில் பாலாஜி உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களைச் சுற்றிச் சுழலும் விசாரணைப் பொறிகள் திமுகவிற்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன. இபிஎஸ் – அமித் ஷா இடையிலான இந்த ரகசிய வியூகங்கள் தமிழக அரசியலில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது வரும் நாட்களில் தெரியவரும்.
