தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் படம் அச்சிடப்பட்ட அரசு இலவச மடிக்கணினிகள் மீது நடிகர் விஜய்யின் புகைப்படங்களை ஒட்டி அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச மடிக்கணினிகளின் முகப்பில் முதல்வர் ஸ்டாலினின் படம் இடம்பெறுவது வழக்கம்.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கியுள்ள நடிகர் விஜய், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, தங்களின் அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் விதமாக, மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பலரும் லேப்டாப்பில் உள்ள முதல்வரின் படத்தை மறைத்துவிட்டு, விஜய்யின் ஸ்டிக்கர்களை ஒட்டி இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

“>

இந்நிலையில் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் இந்தப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், அரசியல் வட்டாரத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளன. அரசு நலத்திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட பொருளில் அரசியல் மாற்றம் தேடும் ரசிகர்களின் இந்தச் செயல், திமுக மற்றும் தவெக தொண்டர்களிடையே கருத்து மோதல்களுக்கு வழிவகுத்துள்ளது.

குறிப்பாக, விஜய்யின் அரசியல் வருகையை வரவேற்கும் விதமாகவும், தற்போதைய அரசுக்கு எதிராகவும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். அரசு சின்னங்களை மறைப்பது குறித்த விமர்சனங்கள் ஒருபுறம் எழுந்தாலும், இளைஞர்கள் மத்தியில் விஜய்க்கு இருக்கும் செல்வாக்கை இது காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.