மத்திய அரசு புகையிலை பொருட்கள் மீதான கலால் வரியை அதிரடியாக உயர்த்தும் ‘மத்திய கலால் (திருத்த) மசோதா 2025’-ஐ நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. இந்த புதிய சட்டத்திருத்தத்தின்படி, சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் மீதான வரி சுமார் 400 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இதன் விளைவாக, தற்போது சந்தையில் சராசரியாக 18 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு சிகரெட்டின் விலை, வரும் 2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் 72 ரூபாயாக உயரக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 1000 சிகரெட்டுகளுக்கு வசூலிக்கப்படும் வரி 200 ரூபாயிலிருந்து 2,700 ரூபாயாகவும், சில பிரிவுகளில் 11,000 ரூபாய் வரையிலும் உயர்த்தப்பட உள்ளதே இந்த விலை ஏற்றத்திற்கு முக்கிய காரணமாகும்.
மக்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டும், குறிப்பாக இளைஞர்களிடையே புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் குறைக்கவும் இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது. சிகரெட் மட்டுமின்றி மெல்லும் புகையிலைக்கான வரி 25 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாகவும், ஹூக்கா போன்ற இதர புகையிலை பொருட்களுக்கான வரிகளும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன.
உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைப்படி புகையிலை பொருட்கள் மீது 75 சதவீத வரி இருக்க வேண்டும் என்பதை எட்டும் நோக்கில் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.இந்த வரலாறு காணாத விலை உயர்வு புகைப்பிடிப்பவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், பலரும் இதனை ஒரு நல்ல தொடக்கமாகக் கருதி புகைப்பழக்கத்தை கைவிட இதுவே சரியான தருணம் என்று சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
