தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்காக தற்போதே அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. அந்த வகையில் திமுக கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான முதல்வர் ஸ்டாலின் ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் வீடு வீடாக சென்று பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார்.
இதேபோன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில் தற்போது திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த திமுக கட்சி நிர்வாகி ஒருவர் ஒட்டிய போஸ்டர் பரபரப்பாக பேசப்படுகிறது.
அதாவது நெல்லை மத்திய மாவட்ட திமுகவின் 30 வது வார்டு செயலாளராக தென்கரை முத்து என்பவர் இருக்கிறார். இவர் தற்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் போட்டியிட வேண்டும் என்று போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார். பொதுவாக அரசியல் கட்சி தலைவர்கள் தங்களுக்கு சாதகமாக இருக்கும் தொகுதிகளை தேர்ந்தெடுத்து தான் போட்டியிடுவார்கள்.
அந்த வகையில் கடந்த தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். திமுக நிர்வாகிகள் சேப்பாக்கம் தொகுதியில் பலமுறை வெற்றி பெற்றுள்ள நிலையில் பாளையங்கோட்டை தொகுதியும் அதே போன்று பல காலமாக திமுகவின் கோட்டையாகவே இருக்கிறது.
பொதுவாக பாளையங்கோட்டை தொகுதியை திமுகவின் கோட்டை என்று கூறும் நிலையில் அந்த தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என நிர்வாகி ஒருவர் போஸ்டர் அடித்து ஒட்டி உள்ளது தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. மேலும் இது தொடர்பான புகைப்படமும் சமூக வலைதளத்தில் வைரல் ஆகிறது.
