தமிழக அரசு கட்டுப்பாட்டில் செயல்படும் டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் எஸ்.விசாகன், பொது மேலாளர்கள் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் கடிதம் அனுப்பி அறிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற டாஸ்மாக் இயக்குநர்கள் கூட்டத்தில் தொகுப்பூதியம் பெறும் அனைத்து கண்காணிப்பாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.2,000 வரை சம்பள உயர்வு வழங்க தீர்மானிக்கப்பட்டது.

இந்த உயர்வில், ரூ.1,000 சம்பள உயர்வாக வழங்கப்படுவதுடன், பணித் திறன் அடிப்படையில் மேலும் ரூ.1,000 வழங்கப்படும் எனவும், இந்த உயர்வு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் முன்தேதி கொண்டுவரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கான நிலுவை தொகையும் இன்னும் இரண்டு நாட்களில் ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், 451 ஊழியர்கள் மீது விலைகோர்வை மீறி செயல்பட்டதாக குற்றச்சாட்டு இருப்பதால், அவர்களுக்கு பணித் திறன் அடிப்படையிலான ரூ.1,000 உயர்வு வழங்கப்படாது எனவும், அவர்களுக்கு மட்டும் ரூ.1,000 சம்பள உயர்வே வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, ஒழுங்காக பணியாற்றும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊக்கமாகவும், விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கையாகவும் உள்ளது.