அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நடிகர் விஜய் கட்சி தொடங்கியதற்கு வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில் அவர் ஆதரவான கருத்துகளையும் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் கூட திமுகவினர் விஜயை பார்த்து பயப்படுவதாகவும் அதனால் தான் அவருடைய மாநாட்டுக்கு தொந்தரவு கொடுப்பதாகவும் கூறினார். அதோடு தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு வெற்றி பெற வேண்டும் என்றும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். இதேபோன்று அதிமுகவின் முக்கிய தலைவர்கள் கூட விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கிறார்கள்.
இதனால் வருகிற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக மற்றும் தமிழக வெற்றி கழகம் கூட்டணி அமைக்குமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் இது குறித்து அதிமுகவினரிடம் கேட்டால் தேர்தல் சமயத்தில் எடப்பாடி பழனிச்சாமி முறையாக அறிவிப்பு வெளியிடுவார் என்று தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது சட்டசபை தேர்தலில் கூட்டணி வைப்பது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தினருடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஒரு புது தகவல் வெளிவந்துள்ளது.
இதன் காரணமாக விஜய் மற்றும் தமிழக வெற்றிக்கழகத்தினரை அதிமுகவினர் யாரும் விமர்சிக்க கூடாது என்று எடப்பாடி பழனிச்சாமி வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஒருவேளை கூட்டணி உறுதியானால் தொகுதி பங்கீடு குறித்த தகவல்களும் வெளிவந்துள்ளது. அதன்படி மொத்தம் உள்ள 233 தொகுதிகளில் அதிமுக 130 தொகுதிகளிலும், தவெக 80 தொகுதிகளிலும் போட்டியிடுமாம். பின்னர் 24 தொகுதிகளில் விசிக போட்டியிடும் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுக கூட்டணியில் இணக்கமாக இல்லை என்றும் கண்டிப்பாக 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்குள் கூட்டணியில் விரிசல் ஏற்படும் என்று அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வருகிறது. மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனுடன் எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகத்தை எடப்பாடி பழனிச்சாமி வகுத்து வருவதாக கூறப்படும் நிலையில் தற்போது அவர் மாஸ்டர் ப்ளான் போட்டு தொகுதி பங்கீடு குறித்து முடிவு செய்து கூட்டணி அமைக்க திட்டமிட்டு வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
