தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேற்று அம்பேத்கர் மற்றும் பெரியார் சிலைகளை திறந்து வைத்தார். பின்னர் அவர் நிகழ்ச்சியில் பேசினார். அவர் பேசியதாவது, திமுக கூட்டணியில் இருந்து வந்து விடுங்கள் கூடுதல் தொகுதி தருகிறோம் ஆட்சியில் பங்கு தருகிறோம் என்றெல்லாம் ஆசை காட்டி பேரம் பேசினார்கள். ஆனால் இது போன்ற அரசியல் நிகழ்வுகளுக்கெல்லாம் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருபோதும் மயங்காது. எங்களை அசைத்து பார்த்தும் அசைக்க முடியவில்லை. இப்படிப்பட்ட ஊசலாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இருக்கிறது.

வளைந்து கொடுப்பதால் முறித்து விட முடியும் என்று நினைத்த நிலையில் அது முடியவில்லை. நான் வளைந்து கொடுப்பவன் தான் அதற்காக என்னை எவ்வளவு எளிதாக ஒடித்து விட முடியாது. என்னை ஒரு துருப்புச் சீட்டாக வைத்து திமுக கூட்டணியை உடைத்து விடலாம் என்று நினைத்தவர்கள் இன்று மீண்டும் பழைய உத்தியை கையில் எடுத்துள்ளனர். அதிமுக கூட்டணியை பாஜக தான் தலைமை தாங்கி நடத்துகிறது என்ற உத்தியில் தான் அமித்ஷா அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதிமுக தலைமை தாங்குகிறது என்றால் எடப்பாடி பழனிச்சாமி தான் கூட்டணியை அறிவித்திருக்க வேண்டும். இப்படி அறிவித்திருந்தால் இபிஎஸ் சுதந்திரமாக இந்த முடிவை எடுத்துள்ளார் என்ற நம்பி இருக்கலாம். ஆனால் அவரை பக்கத்தில் உட்கார வைத்து அமித்ஷா பேசுகிறார் என்று கூறினார். மேலும் திமுக கூட்டணியில் இருந்து வெளிவர தனக்கு பேரம் பேசினார்கள் என்று திருமாவளவன் கூறியது பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.