பாமக கட்சியில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே நாளுக்கு நாள் மோதல் போக்கு என்பது அதிகரித்து வரும் நிலையில் ராமதாஸ் கட்சியில் தனக்கே முழு அதிகாரம் இருப்பதாக கூறுவதோடு அன்புமணியை நீக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அன்புமணி மற்றும் ராமதாஸ் இருவரும் தனித்தனியாக கட்சி நிர்வாகிகளை சந்தித்து வரும் நிலையில் கட்சியை தன் வசப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையில் பாமக கடந்த முறை பாஜகவுடன் கூட்டணி அமைத்த நிலையில் இன்னும் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை. பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பாமக இருக்கும் கட்சி தான் வெற்றி பெறும் என்று கூறினார். இந்நிலையில் பாமக கட்சியின் எம்எல்ஏ சதாசிவம் இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பாமக அதிமுகவுடன் தான் கூட்டணி அமைக்கும் எனவும் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை எடப்பாடி பழனிசாமி வழங்குவார் என்றும் கூறியுள்ளார். வருகால கூட்டணி கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடந்த காலங்களில் வன்னியர்களுக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் 10.5 சதவீத இட ஒதுக்கீடை வாங்கித் தந்து பெருமை சேர்த்ததாக கூறினார். மேலும் கட்சி மேலிடம் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடாத நிலையில் தற்போது எம்எல்ஏ சதாசிவம் அதிமுகவுடன் கூட்டணி என்று கூறியுள்ளது பரபரப்பாக பேசப்படுகிறது.