தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான அஜித் குமார், தனது திரைப்படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளில் கூட கலந்து கொள்ளாதவர் என்ற தனித்துவமான கொள்கையைக் கொண்டவர். “நல்ல படத்திற்கு விளம்பரம் தேவையில்லை” என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் அவர், சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு வணிக விளம்பரத்தில் தோன்றியுள்ளது திரையுலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ‘கேம்பா எனர்ஜி’ பானத்தை அவர் கையில் ஏந்தியிருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகின்றன. தனது சொந்த கார் பந்தய அணியான ‘அஜித் குமார் ரேஸிங்’ வளர்ச்சிக்காகவும், இந்திய விளையாட்டு வீரர்களை சர்வதேச அளவில் முன்னிறுத்தவும் அவர் இந்த முயற்சியை கையில் எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
இந்த திடீர் மாற்றம் குறித்து இணையத்தில் விவாதங்கள் எழுந்தாலும், அவரது ரசிகர்கள் தங்கள் விருப்பமான நாயகனை இத்தனை காலத்திற்குப் பிறகு ஒரு ஸ்டைலான விளம்பரத்தில் காண்பதை கொண்டாடி வருகின்றனர். சர்வதேச கார் பந்தயங்களில் பங்கேற்க பெரும் முதலீடு தேவைப்படுவதால், தனது பந்தயக் கனவை நனவாக்கவே அவர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ‘மேட்-இன்-இந்தியா’ தயாரிப்புகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த கூட்டணியின் ஒரு பகுதியாக, தொலைக்காட்சி விளம்பரங்களும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு விளம்பர உலகில் காலடி எடுத்து வைத்துள்ள ‘தல’ அஜித்தின் இந்த புதிய அவதாரம், அவரது திரைப்பயணத்தில் ஒரு சுவாரஸ்யமான திருப்பமாக அமைந்துள்ளது.
