அனில் ரவிபுடி இயக்கத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்துள்ள ‘மன சங்கர வர பிரசாத் காரு’ திரைப்படம், சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தி வருவதாக படக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். குறிப்பாக, விவாகரத்து செய்யவிருந்த ஒரு தம்பதியினர் இப்படத்தைப் பார்த்துவிட்டு மீண்டும் இணைந்து வாழ முடிவெடுத்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திரைப்படத்தின் வெற்றி குறித்து நடிகர் சிரஞ்சீவி கூறுகையில், “கணவன் – மனைவி இடையே ஏற்படும் குடும்பப் பிரச்சினைகளில் மூன்றாம் நபர் தலையிடக்கூடாது என்பது நிதர்சனமான உண்மை. படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு குறிப்பிட்ட உணர்ச்சிகரமான காட்சி, விவாகரத்து செய்ய முடிவெடுத்திருந்த ஒரு ஜோடியின் மனதை மாற்றியுள்ளது. இப்போது அவர்கள் தங்கள் முடிவை கைவிட்டு, மீண்டும் இணைந்து வாழத் தொடங்கியுள்ளனர். ஒரு திரைப்படம் இத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பது எனக்கு மிகுந்த மனநிறைவைத் தருகிறது” எனத் தெரிவித்தார்.
கடந்த 12-ம் தேதி உலகம் முழுவதும் வெளியான இந்தப் படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் கேத்ரின் தெரசா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தைப் பேசும் இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
வெளியான நான்கு நாட்களிலேயே உலக அளவில் சுமார் ரூ. 190 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாகத் தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படம் மிகப்பெரிய வெற்றியை நோக்கித் தடம் பதித்து வருகிறது.
