வெள்ளியங்கிரி பகுதியில் உற்பத்தியாகும் நொய்யல் ஆறு திருப்பூர், ஈரோடு வட்டம் வழியாக சுமார் 172 கிலோமீட்டர் தூரம் கடந்த ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி அருகே காவிரியில் கலக்கிறது. இந்த நொய்யல் ஆற்றின் அணை அருகே வயக்காட்டுப்புதூர், காத்தாங்கண்ணி, வெங்கலபாளையம் கணபதிபாளையம் உள்ளிட்ட 5 கிராமங்கள் உள்ளது.

சாலை வசதி இல்லாத இந்த கிராமங்களில் வசிக்கும் மக்கள் நொய்யல் ஆற்றைக் கடக்க கடந்த 20 வருடங்களாக பரிசலை பயன்படுத்தி வருகின்றனர். 20 வருடங்களைக் கடந்தும் ஆற்றைக் கடப்பதற்கு பாலம் இல்லாததால் இரண்டு கரையிலும் கம்பங்கள் நட்டு அதில் கம்பிகளை கட்டி அதன் உதவியுடன் பரிசலில் மக்கள் பயணிக்கின்றனர்.

சாலை வழியாக செல்ல வேண்டுமென்றால் 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு தூரத்தை குறைக்கும் பொருட்டு பரிசலில் கடந்து செல்வதாக கிராம மக்கள் கூறுகின்றனர். இந்நிலையில் நொய்யல் ஆற்றின் வெள்ள நீர் 2000 கன அடி வரை தற்போது சென்று கொண்டிருக்கும் காரணத்தினால் ஆற்றைக் கடப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறி தரைப்பாலம் அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.