கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தவர் முசிறி பகுதியை சேர்ந்த நிதிஷ்குமார். அதேபோன்று முதலாம் ஆண்டு படித்து வந்தவர் தொட்டியம் பகுதியை சேர்ந்த மாணவர் அண்ணாமலை. இவர்கள் இருவரும் ஒரே கல்லூரி பேருந்தில் செல்வது வழக்கம்.

சம்பவத்தன்று சகமானவர்களுடன் இவர்கள் இருவரும் கல்லூரிக்கு பேருந்தில் வந்து கொண்டிருந்த போது நிதீஷ்குமாருக்கும் அண்ணாமலைக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு கைகலப்பாக மாறிய நிலையில் அண்ணாமலை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் நிதிஷ்குமாரின் கழுத்தில் குத்தியுள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த நிதீஷ்குமாரை பார்த்து சக மாணவ மாணவிகள் அலறினார். இதனால் ஓட்டுனர் கல்லூரி பேருந்தை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று நிதீஷ்குமாரை மருத்துவமனையில் அனுமதித்தார். அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதனிடையே சம்பவம் குறித்த தகவல் அறிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு அண்ணாமலையை கைது செய்தனர். அண்ணாமலை சில நாட்களாக சைக்கோ போன்று நடந்து கொண்டதாகவும் இதனால் நிதிஷ்குமார் அவரிடம் பேசாமல் தவிர்த்து வந்துள்ளார் என்றும் நிதிஷ்குமார் தந்தை காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.