உத்தரப் பிரதேசத்தின் தியோரியா மாவட்டத்தில், நவம்பர் 25 அன்று நடந்த ஒரு திருமணம், மணமகள் தன் கணவர் வீட்டிற்குச் சென்ற 20 நிமிடங்களிலேயே முடிவுக்கு வந்தது. மணமகன் விஷால் வீட்டிற்கு அழைத்து வரப்பட்ட மணமகள் பூஜா, திடீரென வெளியே வந்து, தான் கணவருடன் வாழ விரும்பவில்லை என்று அறிவித்தார்.

ஏன் இந்த முடிவு என்று குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவரும் கேட்டபோதும், அவர் தனது முடிவிற்கான காரணத்தை மட்டும் கூற மறுத்துவிட்டார். சமாதான முயற்சிகள் தோல்வி அடையவே, இரு குடும்பங்களுக்கும் இது பெரிய தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.

​இதையடுத்து, கிராமத்தில் பஞ்சாயத்து கூட்டப்பட்டு, இரு குடும்பத்தினரும் ஐந்து மணி நேரம் விவாதித்தனர். எந்த முடிவும் எட்டப்படாததால், அந்தத் திருமணத்தை பரஸ்பர சம்மதத்துடன் முடித்துக் கொள்ள பஞ்சாயத்து அறிவுறுத்தியது.

இதன்படி, பரிசுகள் மற்றும் பணத்தைத் திரும்பப் பெறுவது என்ற உடன்படிக்கை ஏற்பட்டு, பூஜா அதே நாளில் தன் பெற்றோர் வீட்டிற்குத் திரும்பிச் சென்றார். இந்தச் சம்பவம், மணமகன் வீட்டாரையும், உறவினர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.