கடலூர் மாவட்டத்தில் உள்ள பழைய வண்டிபாளையத்தில் பொம்மை செய்யும் தொழிலாளியான ஞானவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 3 மகள்கள் இருக்கின்றனர். இதில் 2-வது மகள் கிரிஜா திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று நடந்த வேதியியல் தேர்வுக்காக கிரிஜா படித்துக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஞானவேல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த கிரிஜா கதறி அழுதார். மேலும் கடைசி தேர்வை எழுத சொல்ல வேண்டும் என உறவினர்களிடம் தெரிவித்தார்.

அதன்படி உறவினர்கள் கிரிஜாவை தேர்வு எழுத பள்ளிக்கு அழைத்து சென்றனர். அங்கு வேதியியல் பாட தேர்வு எழுதி முடித்தார். இதனையடுத்து தேர்வு முடிந்தவுடன் மாணவியை உறவினர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் ஞானவேலின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.