விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மலையரசன்குப்பம் கிராமத்தில் முருகன்- ரேணுகா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் வீட்டு வாசல் முன்பு பட்டி அமைத்து பத்து ஆடுகளை வளர்த்து வருகின்றனர். நேற்று முன்தினம் காலை ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டது. இதனால் ரேணுகா வெளியே வந்து பார்த்தபோது 2 வாலிபர்கள் ஒரு ஆட்டை மோட்டார் சைக்கிளில் ஏற்றி கொண்டு செல்ல முயன்றதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனை பார்த்ததும் ரேணுகா திருடன் திருடன் என்ன சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் ஓடிவந்து வாலிபர்களை மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் செஞ்சி பீரங்கிமேடு பகுதியை சேர்ந்த அரவிந்த் குமார் மற்றும் மோகன் என்பது தெரியவந்தது. இவர்கள் காதலர் தினத்தை கொண்டாடுவதற்கு கையில் பணம் இல்லாமல் சிரமப்பட்டனர். இதனால் ஆட்டை திருடி விற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் காதலர் தினத்தை கொண்டாட முடிவு செய்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிந்த போலீசார் இருவரையும் கைது செய்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.