மலையாளத் தொலைக்காட்சியில் பிரபல நடிகர் சித்தார்த் வேணுகோபால் (41), புற்றுநோய் பாதிப்பால் சனிக்கிழமை காலமானார். அவரது மறைவு மலையாளத் திரைத்துறையினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சூர் மாவட்டம் சாலக்குடியைச் சேர்ந்த சித்தார்த், கடந்த இரண்டு ஆண்டுகளாகப் புற்றுநோயுடன் போராடி வந்தார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி இன்று அவரது உயிர் பிரிந்தது. சித்தார்த்தின் மறைவு குறித்து நடிகை சீமா ஜி. நாயர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். அதில்,
“எல்லா நம்பிக்கைகளும் தகர்ந்துவிட்டன. வேதனைகளே இல்லாத ஒரு உலகிற்கு சித்தார்த் சென்றுவிட்டான். கடந்த இரண்டு ஆண்டுகளாக உனக்காக நான் போராடினேன். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நான் சோர்வடைந்த நிலையிலும், உன்னைக் காப்பாற்ற ஓடி ஓடி உழைத்தேன். ஆனால், இனி உனக்கு எந்த வலியும் இருக்கக்கூடாது என்று கடவுள் முடிவெடுத்துவிட்டார். இந்தத் துயரத்தை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை,” எனப் பதிவிட்டுள்ளார்.
அதேபோல், நடிகர் கிஷோர் சத்யா தனது இரங்கல் செய்தியில், சித்தார்த் ஒரு சிறந்த கலைஞர் என்றும், அவரைப் பராமரித்த சீமா ஜி. நாயரின் அர்ப்பணிப்பு போற்றுதலுக்குரியது என்றும் குறிப்பிட்டுள்ளார். சிறுவயது முதலே நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட சித்தார்த், கல்லூரி காலத்திலேயே நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். பின்னர் தொகுப்பாளராகத் தனது பயணத்தைத் தொடங்கி, தயாரிப்பாளர் அருண் கோஷின் ஆதரவுடன் சின்னத்திரையில் அறிமுகமானார். இவர் கஸ்தூரிமான்’, ‘பாக்கியஜாதகம்’ போன்ற ஹிட் சீரியல்களில் நடித்ததன் மூலம் கேரளா முழுவதும் பிரபலமானார்.
மேலும் சித்தார்த்தின் தந்தை சில ஆண்டுகளுக்கு முன்புதான் காலமானார். தற்போது தாயார் மற்றும் தம்பியைப் பிரிந்து சித்தார்த் சென்றுள்ளது அந்தக் குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாக மாறியுள்ளது.
