பாலிவுட் திரையுலகம் என்பது வெளிச்சத்தில் இருக்கும்போது கொண்டாடுவதும், இருளுக்குச் சென்றால் கண்டு கொள்ளாமல் விடுவதும் இயல்பாகிவிட்டது. இதற்குச் சாட்சியாக, 90-களில் ‘ஆஷிகி’ படம் மூலம் இந்தியாவின் ‘லவ்வர் பாய்’ ஆக வலம் வந்த நடிகர் ராகுல் ராயின் தற்போதைய நிலையை விளக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
அந்த வீடியோவில், நீண்ட தலைமுடியுடன் மிகச் சாதாரண உடையணிந்து, தனது கனமான சூட்கேஸை இழுத்தபடி சாலையில் தனியாக நடந்து செல்கிறார் ராகுல் ராய். அருகில் செல்பவர்கள் கூட இவர் ஒரு காலத்தில் சூப்பர் ஸ்டாராக இருந்தவர் என்பதை அடையாளம் காண முடியவில்லை என்பதுதான் வேதனையான உண்மை.
1990-ல் வெளியான ‘ஆஷிகி’ திரைப்படம் ராகுல் ராயை ஒரே இரவில் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது. அந்தப் படம் தொடர்ந்து 6 மாதங்கள் ஹவுஸ்புல்லாக ஓடி சாதனை படைத்தது. ஆனால், அந்த வெற்றிக்குப் பிறகு அவர் நடித்த அடுத்தடுத்த 25 திரைப்படங்கள் படுதோல்வியைச் சந்தித்தன. இடையில் ‘பிக் பாஸ்’ சீசன் 1-ல் வெற்றியாளராகத் தடம் பதித்தாலும், சினிமாவால் அவர் கைவிடப்பட்டார்.
“உண்மையான கலைஞர்களுக்கு சினிமா உலகம் வாய்ப்பளிக்காதபோது, அவர்களின் வாழ்க்கை இப்படித்தான் போராட்டமாகிவிடுகிறது” என ராகுல் ராயின் வீடியோவைப் பார்த்து ரசிகர்கள் கலக்கத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர். எந்தவொரு பார்ட்டி, அவார்டு பங்க்ஷன் என எதிலும் கலந்து கொள்ளாமல் தற்போது அவர் தனிமையில் வாழ்ந்து வருவது திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
