கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம், சீனிவாசப்புரா தாலுகா சுள்கல்லூ வனப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது சாலையோரத்தில் சந்தேகத்துக்கிடமான வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அருகே சென்று சோதனை செய்த போலீசார், வாகனத்தின் பின்புறத்தில் கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஒரு வாலிபர் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தகவல் ராயல்பாடு சப்-இன்ஸ்பெக்டருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினார்.

விசாரணையில், பிணமாக கிடந்தவர் முல்பாகல் தாலுகா, பெட்டிபாரிப்பள்ளி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி வெங்கடரமணா (40) என்பது தெரியவந்தது. அவருடைய மனைவியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து அவரை கொலை செய்திருப்பது பின்னர் வெளிச்சத்துக்கு வந்தது. வெங்கடரமணாவுக்கும், அதே கிராமத்தை சேர்ந்த கதிரம்மா (35) என்பவருக்கும் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தம்பதிக்கு இரண்டு மகன்களும் உள்ளனர். இந்த நிலையில், கதிரம்மாவுக்கு அதே கிராமத்தை சேர்ந்த வேணு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

இந்த தொடர்பை வெங்கடரமணா அறிந்த பின், கள்ளக்காதலை கைவிடுமாறு மனைவியிடம் எச்சரித்ததாக கூறப்படுகிறது. ஆனால், கதிரம்மா தனது கணவனின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் வேணுவுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தார். இதனால், தனது கணவர் தங்களுக்கு இடையூறாக இருப்பதாக நினைத்த கதிரம்மா, கள்ளக்காதலனுடன் சேர்ந்து வெங்கடரமணாவை கொலை செய்ய முடிவு செய்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்த வெங்கடரமணாவை, இருவரும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்தனர்.

பின்னர் அவரது உடலை எரிக்க வாகனத்தில் இரண்டு நாட்கள் சுற்றி வந்தனர். ஆனால் போலீசில் மாட்டிக்கொள்வோம் என்ற அச்சத்தில், உடலை வாகனத்திலேயே போட்டுவிட்டு கதிரம்மாவும், வேணுவும் தப்பிச் சென்றனர். சம்பவம் தொடர்பாக இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.