கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கட்டிட தொழிலாளியாக வேலை செய்துகொண்டிருந்த போது, ஒடிசாவை சேர்ந்த சுபம் சபர் (19) என்பவருக்கு வந்த ஒரு தொலைபேசி அழைப்பு அவரது வாழ்க்கையே மாற்றியது.

ஜூன் 14ஆம் தேதி வேலை நடுவே கிடைத்த அந்த அழைப்பில், அவர் தேசிய மருத்துவப் பிரவேசத் தேர்வு (NEET-UG) தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பதாக அவரது ஆசிரியர் தெரிவித்தார். அந்த நிமிடத்தில் கண்ணீரை அடக்க முடியாமல், “நான் டாக்டராகப்போகிறேன்” என்று பெற்றோரிடம் தெரிவித்ததாகவும், தனது சேமிப்புகளை எடுத்துக்கொள்ள முடிவு செய்ததாகவும் சபர் கூறியுள்ளார்.

ஒடிசாவின் குர்தா மாவட்டத்தில் உள்ள முடுலிதியாஹ் கிராமத்தை சேர்ந்த சபர், சிறு விவசாயியான தந்தையின் மூத்த மகனாகவும், நான்கு சகோதரர்களில் முதன்மையானவராகவும் உள்ளார். எப்போதும் பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டபோதும், கல்வியை தொடர வேண்டும் என்ற உறுதியுடன் இருந்தார்.

10ஆம் வகுப்பில் 84% மதிப்பெண்கள் எடுத்த அவர், புவனேஷ்வரில் உள்ள BJB கல்லூரியில் 11, 12ஆம் வகுப்பு படித்தார். முதல் ஆண்டு சுயமாக படித்தாலும், இரண்டாம் ஆண்டில் கணிதம் மற்றும் இரசாயனவியல் டியுஷனில் சேர்ந்தார். 12ஆம் வகுப்பு தேர்வில் 64% மதிப்பெண்கள் பெற்றார். அப்போது தான் டாக்டராக வேண்டும் என்ற கனவு உறுதியானது.

அதனைத் தொடர்ந்து ஒடிசாவில்  உள்ள ஒரு கோச்சிங் மையத்தில் NEET தேர்வுக்கான பயிற்சி பெற்றார். தேர்வு எழுதி முடித்தபின், மூன்று மாதங்கள் பெங்களூருவில் கட்டிடப்பணியில் ஈடுபட்டு சம்பாதித்த பணத்தில், ஒரு பகுதியை கோச்சிங் கட்டணமாக செலுத்தினார்.

மீதியை மருத்துவக் கல்லூரி சேர்க்கைச் செலவுக்காக வைத்தார். தனது முதல் முயற்சியிலேயே அட்டவணை பழங்குடியினர் பிரிவில் 18,212ஆம் இடத்தைப் பெற்று, பெரம்பூர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சேர்க்கை பெற்றுள்ளார். நான்கு ஆண்டுகளில் தனது கிராம பஞ்சாயத்திலிருந்து டாக்டர் ஆகும் முதல் நபராக சபர் வரலாறு படைக்கிறார்.