மும்பையில் புகழ்பெற்ற தக்-தக் கும்பல் (Thak-Thak Gang) புதிய திருட்டு முறையை கையாண்டு, ஒரு கார் ஓட்டுநரின் ஐபோனை திருடிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குர்லாவில் உள்ள எஸ்எல்ஆர் பாலம் அருகே நடந்த இந்த சம்பவம், காரில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

வீடியோவில், ஒரு திருடன் கார் ஓட்டுநரின் கவனத்தை திசைதிருப்ப, காரின் ஜன்னலை தட்டுவது போல நடிக்கிறான். இதற்கிடையில், மற்றொரு திருடன் மறுபுறம் வந்து ஜன்னலை தட்டி குழப்பத்தை ஏற்படுத்துகிறான். ஓட்டுநர் திசைமாறி பார்க்கும்போது, முதல் திருடன் விரைவாக காருக்குள் கைவிட்டு ஐபோனை திருடி தப்பி ஓடிவிடுகிறான். இந்த புதிய திருட்டு முறை, தக்-தக் கும்பலின் தந்திரமான செயல்பாட்டை வெளிப்படுத்துகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Mo (@mo.of.everything)

இந்த திருட்டு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட கார் ஓட்டுநரான சாரன்ஷ், வினோபா பாவே காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்துள்ளார். காவல்துறை, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையை தொடங்கி, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறது. மும்பை காவல்துறை, ஓட்டுநர்களுக்கு குறிப்பாக போக்குவரத்து நெரிசலில் அல்லது மக்கள் நெருக்கமான இடங்களில் கார் நிறுத்தும்போது கூடுதல் கவனத்துடன் இருக்குமாறு எச்சரித்துள்ளது.

“யாரேனும் கார் ஜன்னலை தட்டினால், ஜன்னலை திறக்கவோ, கதவை திறக்கவோ கூடாது,” என பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். இந்த வைரல் வீடியோவுக்கு சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். ஒரு பயனர், “ஐபோனை எளிதாக கண்காணிக்க முடியும், விரைந்து நடவடிக்கை எடுங்கள்,” எனவும், மற்றொரு பயனர், “2008ல் என் அம்மாவுக்கு இதேபோல் நடந்தது, இன்னும் இந்த திருட்டு தொடர்கிறது, ஆனால் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை,” எனவும் கருத்து பதிவிட்டுள்ளனர்.