கர்நாடக மாநிலம் பெங்களூரு சந்திரா லே-அவுட் பகுதியைச் சேர்ந்தவர் மோனிகா (35). இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக முதல் கணவரை பிரிந்த மோனிகா, பின்னர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இரண்டாவது கணவர் மற்றும் 2 மகன்களுடன் அவர் வசித்து வந்தார்.
இந்நிலையில், மோனிகா சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் ‘ரீல்ஸ்’ வீடியோக்களை வெளியிட்டு வந்தார். அந்த வீடியோக்களை பார்த்த பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் போலீஸ்காரர் ராகவேந்திரா, மோனிகாவுடன் தொடர்பு ஏற்படுத்தினார். இன்ஸ்டாகிராம் மூலம் அவர் அனுப்பிய ‘பாலோ ரிக்வஸ்ட்’-ஐ மோனிகா ஏற்றுக் கொண்டதுடன், தனது செல்போன் எண்ணையும் பகிர்ந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து இருவருக்கும் இடையிலான நட்பு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. தொடர்ந்து செல்போன் மூலம் பேசியதுடன், தனிமையில் சந்தித்தும் பழகி வந்துள்ளனர். வீட்டில் யாரும் இல்லாத நேரங்களில் மோனிகாவின் வீட்டிற்கே ராகவேந்திரா வந்து சென்றதாக கூறப்படுகிறது. மேலும், இருவரும் ஜோடியாக பல்வேறு ரீல்ஸ் வீடியோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்துள்ளனர்.
போலீஸ்காரர் ராகவேந்திராவுக்கும் திருமணமாகி மனைவியும், ஒரு மகனும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இருவரும் சேர்ந்து வீட்டைவிட்டு வெளியேற முடிவு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு மோனிகா, தனது வீட்டில் இருந்த 160 கிராம் நகைகள் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கத்தை எடுத்துக் கொண்டு ராகவேந்திராவுடன் தப்பிச் சென்றுள்ளார். அவர்கள் தற்போது எங்கு உள்ளனர் என்பது தெரியவில்லை.
இந்த சம்பவம் குறித்து மோனிகாவின் இரண்டாவது கணவர் சந்திரா லே-அவுட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இச்சம்பவம் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக கூறி போலீஸ்காரர் ராகவேந்திராவை பணியிடை நீக்கம் செய்து உயர் போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
