சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற்ற கண்காட்சியொன்றில், பார்வையிட வந்த ஒரு குழந்தை தவறுதலாக 2 கிலோ எடையுள்ள தூய தங்க கிரீடத்தை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், அந்த கிரீடத்தின் உரிமையாளர் குழந்தையிடமிருந்து எந்த இழப்பீடும் கோரமாட்டார் என அறிவித்துள்ளார்.

பெய்ஜிங்கில் நடைபெற்ற கலைக் கண்காட்சியில், கையால் செய்யப்பட்ட பீனிக்ஸ் வடிவ திருமண தங்க கிரீடம் கண்ணாடி காட்சிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்தது. அப்போது அங்கு வந்த இரண்டு குழந்தைகள் அந்த கிரீடத்தை புகைப்படம் எடுக்க முயன்றுள்ளனர். இதில், ஒரு குழந்தை தவறுதலாக கிரீடம் வைக்கப்பட்டிருந்த ஸ்டாண்டைத் தொட்டதால், கண்ணாடிப் பெட்டி உடைந்து, அதனுடன் கிரீடமும் கீழே விழுந்து சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

 

சுமார் 2 கிலோ எடையுள்ள தூய தங்கத்தால் செய்யப்பட்ட இந்த கிரீடம், சீன சமூக வலைதளங்களில் பிரபலமான ஜாங் கையிக்கு சொந்தமானது. அவரது கணவரும் கலைஞருமான ஜாங் யுடோங், இதனை தனது மனைவிக்கு திருமணப் பரிசாக வடிவமைத்து வழங்கியுள்ளார். இந்த கண்காட்சியையும் அந்த தம்பதியினரே ஏற்பாடு செய்திருந்தனர்.

நிபுணர்களின் மதிப்பீட்டின்படி, இத்தகைய பெரிய தங்க கிரீடத்தை பழுதுபார்ப்பதற்கான தொழிலாளர் செலவு மட்டும் 23,000 முதல் 57,000 அமெரிக்க டாலர் வரை (சுமார் ரூ.20.80 லட்சம் முதல் ரூ.51.50 லட்சம் வரை) ஆகலாம். சேதத்தின் அளவைப் பொறுத்து செலவு மாறக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட ஜாங் கையி, கிரீடம் சேதமடைந்தது குறித்து தனக்கு வருத்தம் இருப்பதாக தெரிவித்தார். ஆனால், தவறு செய்த குழந்தையை குறை கூற விரும்பவில்லை என்றும், கிரீடம் காப்பீடு செய்யப்பட்டுள்ளதால், குழந்தையிடமிருந்து எந்த இழப்பீடும் கோரப்படாது என்றும் அவர் கூறினார். இந்த மனிதநேயமான அணுகுமுறை பலரிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.