ஐபிஎல் 2026 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான போட்டியின் போது, விராட் கோலி மற்றும் சுப்மன் கில் இடையேயான நிகழ்வுகள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. இப்போட்டியில் 18 பந்துகளில் 43 ரன்கள் குவித்து அதிரடி காட்டிய சுப்மன் கில்லின் விக்கெட்டை விராட் கோலி கேட்ச் பிடித்தார்.

அதன் பிறகு கோலி மிகவும் ஆக்ரோஷமாக கில்லைப் பார்த்து கத்தியும், பந்தைத் தரையில் அடித்தும் தனது ‘செண்ட்-ஆஃப்’ கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார். இது மைதானத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போட்டி முடிந்த பிறகு சுப்மன் கில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட ஒரு பதிவு வைரலாகி வருகிறது.

இதனால் சுப்மன் கில் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், விராட் கோலியுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, சிறந்தவரிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள், மேலானவராக இருக்க முயற்சி செய்யுங்கள் என்ற 9 வார்த்தைகள் கொண்ட கேப்ஷனைப் பதிவிட்டுள்ளார். களத்தில் கோலி ஆக்ரோஷத்தைக் காட்டினாலும், அவர் மீதுள்ள மரியாதையை கில் இதன் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் கோலியும் மைதானத்திற்கு வெளியே கில்லுடன் சகஜமாகப் சிரித்துப் பேசியது, இருவருக்கும் இடையிலான நட்புறவை உணர்த்தியது. கோலியின் ஆக்ரோஷமான கொண்டாட்டத்திற்குப் பிறகு கில்லின் இந்த முதிர்ச்சியான பதில், தற்போது இணையத்தில் கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.