ஈரானின் மினாப் நகரில் உள்ள பெண்கள் தொடக்கப்பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 160 குழந்தைகள் கொல்லப்பட்ட விவகாரம் உலகளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுச் சதி இருப்பதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

இந்தத் தாக்குதலில் உயிரிழந்த குழந்தைகளின் உடல்களுக்கு அருகில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எக்காளத்துடன் சிரித்துக் கொண்டிருப்பது போன்ற ஒரு சுவரொட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கையில் நோபல் அமைதிப் பரிசுப் பதக்கத்தை ஏந்தி, அதை பெருமையுடன் காட்டுவது போல வடிவமைக்கப்பட்டுள்ள அந்த சுவரொட்டி, சர்வதேச அரசியலில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.

கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி, ஈரான் தலைவர் அயதுல்லா காமினேனி படுகொலை செய்யப்பட்ட அதே நாளில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சுமார் 175 பேர் கொல்லப்பட்டதாகவும், அவர்களில் பெரும்பாலோர் சிறுமிகள் என்றும் ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதலில் தங்களுக்குத் தொடர்பில்லை என்று அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், “பள்ளிக்கூடம் அமெரிக்க ஏவுகணையால் தாக்கப்பட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. டாமோஹாக் (Tomahawk) ஏவுகணைகள் ஈரான் உள்ளிட்ட பிற நாடுகளிடமும் உள்ளன. இது மிகவும் பொதுவான ஆயுதம். ஈரானின் ஏவுகணைகள் துல்லியமற்றவை என்பதால், அவர்களே தங்களைத் தாக்கித் கொண்டிருக்கக் கூடும்” என்று சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.

முன்னதாக, வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, தனது 2025-ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசை டிரம்பிற்கு வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. பல மோதல்களை முடிவுக்குக் கொண்டு வந்ததற்காகத் தான் நோபல் பரிசுக்குத் தகுதியானவர் என்று டிரம்ப் கூறி வந்த நிலையில், தற்போது அவர் மீதான இந்தத் தாக்குதல் குற்றச்சாட்டு, ‘அமைதிக்கான மனிதர்’ என்ற பிம்பத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

ஈரானில் இதுவரை அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்களால் சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். டிரம்பின் நடவடிக்கைகள் அமைதியை நிலைநாட்டுவதற்குப் பதிலாக, போரை நோக்கி நகர்வதாக ‘தி கார்டியன்’ உள்ளிட்ட சர்வதேச ஊடகங்கள் விமர்சித்துள்ளன. அவர் “போருக்கான நோபல் பரிசை” தேடிச் செல்கிறாரா என்ற கேள்வியும் அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.