திரையுலகில் தடம் பதிப்பதற்கு முன்னதாகத் தான் கடந்து வந்த கரடுமுரடான பாதைகள் குறித்து பிரபல தெலுங்குத் தொலைக்காட்சித் தொகுப்பாளரும் நடிகையுமான ஸ்ராவந்தி சோகாரப்பு அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் உருக்கமாகப் பகிர்ந்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற இவர் தனது ஆறாம் வகுப்பு முதலே மெஹந்தி கலைஞராகப் பணியாற்றிப் பணம் சம்பாதித்ததாகத் தெரிவித்துள்ளார். சிறுவயது முதலே திரையுலகில் சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் சில படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்த போதிலும் குடும்பச் சூழல் மற்றும் தனிப்பட்ட காரணங்களால் அந்த வாய்ப்புகளைத் தொடர முடியாமல் போனதாக அவர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
திருமணத்திற்குப் பிறகு ஏற்பட்ட கடும் நிதி நெருக்கடி காரணமாகத் திரைத்துறையை விட்டு விலகி ஐதராபாத் பகுதியில் உள்ள ஒரு பிரபல நகைக்கடையில் விற்பனையாளராகப் பணியில் சேர்ந்ததாக அவர் கூறியுள்ளார். அங்கு நீண்ட நேரம் நின்று கொண்டே வேலை செய்ய வேண்டியிருந்ததால் உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட்டு அந்த வேலையை விட நேரிட்டது.
பின்னர் தனது நண்பரின் உதவியால் ஒரு தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததாகவும் அந்தத் தொடக்கமே தனது இன்றைய வெற்றிக்கு அடித்தளம் அமைத்ததாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். விடாமுயற்சியும் கடின உழைப்பும் இருந்தால் எந்தத் தடைகளையும் கடந்து சாதிக்கலாம் என்பதற்கு ஸ்ராவந்தியின் வாழ்க்கை ஒரு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது.
