தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கான விருப்ப மனு விநியோகம் இன்று முதல் பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கோலாகலமாகத் தொடங்கியது. பிப்ரவரி 14-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த நிகழ்வில், காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தகுதியானவர்கள் நூறு ரூபாய் கட்டணம் செலுத்தி மனுக்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் விருப்ப மனுவை கட்சித் தலைவர் ஜோசப் விஜய் சார்பில் முக்கிய நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர். சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கட்சியின் முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பனையூர் அலுவலகத்தில் திரண்டதால் அந்தப் பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது.
கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்டோர் முதல் ஆளாகத் தங்களது விருப்ப மனுக்களைப் பெற்றுக்கொண்டனர். இன்று ஒரே நாளில் மட்டும் சுமார் 10,000 விருப்ப மனுக்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகத் கட்சியின் இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, விருப்ப மனுக்களைப் பெற இன்னும் ஒரு வார காலம் அவகாசம் இருப்பதால் தொண்டர்கள் பொறுமையுடன் வந்து பெற்றுக்கொள்ளுமாறு கட்சித் தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது.
தலைவர் விஜய்யின் பெயரில் எத்தனை மனுக்கள் பெறப்பட்டுள்ளன என்பது குறித்த கணக்கெடுப்பு நடைபெற்று வருவதாகவும், பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களைத் திரும்ப ஒப்படைப்பதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் களத்தில் முதன்முறையாகக் களம் இறங்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் இந்த நகர்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 50000 விருப்பம் அணுக்களை தொண்டர்கள் பெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
