உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் சமூக வலைதளங்களுக்காக வீடியோ பதிவு செய்தபோது நேர்ந்த விபத்தில் 22 வயது இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். பிசௌரியா ரயில் நிலையம் அருகே நிரணப் பணிகள் நடைபெற்று வரும் மேம்பாலப் பகுதியில் முகமது ஃபைசான் என்ற இளைஞர் தனது நண்பருடன் இணைந்து வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்.

 

அப்போது அங்கிருந்த ராட்சத சிமெண்ட் சிலாப்புகள் மீது ஏறியபோது எதிர்பாராதவிதமாக கால் தடுமாறி கீழே விழுந்தார். அந்தச் சமயத்தில் ஒரு கனமான சிலாப்பு அவரது தலை மீது விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து நவாப்கஞ்ச் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமூக வலைதளப் புகழுக்காகப் பாதுகாப்பு இல்லாத இடங்களில் இத்தகைய ஆபத்தான முயற்சியில் ஈடுபடுவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.