பாஜக சார்பில் நடத்தப்பட்ட தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் என்ற அரசியல் பிரச்சாரப் பயணத்தின் நிறைவு விழா புதுக்கோட்டையில் இன்று எழுச்சியுடன் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடினார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது அளித்த 505 வாக்குறுதிகளில் 364 திட்டங்களை நிறைவேற்றிவிட்டதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறி வருவது முற்றிலும் உண்மைக்கு மாறானது என்று அவர் குற்றம் சாட்டினார். தமிழகத்தில் முதல்வரே முன்னின்று பொய் சொல்லும் ஆட்சி நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்ட அவர், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியது தொடர்பாக அரசு உடனடியாக வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும் பேசிய அண்ணாமலை, திமுக தனது இணையதளத்தில் மாவட்ட வாரியாக வெளியிட்டிருந்த குறிப்பிட்ட வாக்குறுதிகளைத் தற்போது நீக்கிவிட்டதாகத் திடுக்கிடும் தகவலை வெளியிட்டார். மக்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் திமுக அரசு பின்வாங்குவதாக அவர் விமர்சித்தார். தமிழக மக்கள் விழிப்புணர்வுடன் இருப்பதாகவும், வரவிருக்கும் காலங்களில் திமுகவின் தேர்தல் காலப் பொய்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் பேசினார்.

இந்தப் பயணத்தின் மூலம் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பாஜகவின் கொள்கைகள் சென்றடைந்துள்ளதாகவும், தமிழக அரசியலில் இது ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.