தமிழகத்தில் பெட்டிக்கடை முதல் விவசாயக் கூலி வேலைகள் வரை அனைத்துத் துறைகளிலும் வடமாநிலத்தவர்கள் ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும், இது எதிர்காலத்தில் தமிழர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறும் என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

காரைக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதாவது, “இன்று பெட்டிக்கடையில் தொடங்கி காட்டு வேலை வரை எல்லா இடங்களிலும் வடமாநிலத்தவர்கள் வந்துவிட்டார்கள். ‘சும்மா இரு, நான் உனக்கு காசு தருகிறேன்’ என அரசு வழங்கும் இலவசத் திட்டங்கள் மூலம் தமிழர்களை நுட்பமாக உழைப்பில் இருந்து வெளியேற்றி விட்டார்கள். தமிழர்கள் உழைக்கத் தயங்கும் இடங்களை அவர்கள் ஆக்கிரமித்து வருகிறார்கள்.”

“இங்கே தங்கி வேலை செய்பவர்கள் மெல்ல மெல்ல வாக்குரிமை பெறுவார்கள். இதன் மூலம் அவர்களுக்குத் தானாகவே அதிகாரம் கிடைத்துவிடும். ஏற்கனவே பொருளாதார ரீதியாகப் பின்தங்கியிருக்கும் நாம், இதன் விளைவாக மேலும் அடிமைகளாக மாறும் சூழல் உருவாகும். இறுதியில் நாம் நிலமற்றவர்களாக மாற்றப்பட்டு, சொந்த மண்ணிலேயே அடித்து விரட்டப்படுவோம். இது இன்னும் 10 ஆண்டுகளில் நடக்கும், இதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள்” என அவர் எச்சரித்தார்.

தமிழகத்தில் வசிக்கும் வடமாநிலத்தவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்று குறிப்பிட்ட அவர், “நாங்கள் ஒருபோதும் வன்முறையை ஊக்கப்படுத்தவில்லை, அது பிழையானது” என்றும் தெளிவுபடுத்தினார்.

வரவிருக்கும் தேர்தல் குறித்துப் பேசிய சீமான், “நாங்கள் வழக்கமான தேர்தல் அறிக்கைகளைக் கொடுப்பதில்லை, ஏனெனில் அது பயனற்றது. மாறாக, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எப்படிச் செயல்படுவோம் என்பதற்கான ‘செயல்பாட்டு வரைவை’ தான் மக்களிடம் முன்வைப்போம். இந்தத் தேர்தலுக்கும் அந்த வரைவு வெளியிடப்படும்,” என்று தெரிவித்தார்.