கர்நாடக மாநிலம் மங்களூரு நகரத்தில் உள்ள சர்க்யூட் ஹவுஸ் சாலையில் சென்ற ஒரு மாருதி ஆல்டோ காரின் பின்னால் ஒட்டப்பட்டிருந்த வினோதமான ஸ்டிக்கர் சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. பொதுவாக சாலைப் பாதுகாப்பிற்காக வாகனங்களின் பின்னால் இடைவெளி விட்டு வரவும் என்று எழுதப்பட்டிருக்கும். ஆனால் இந்த காரின் பின்னால் இடைவெளி விட்டு வரவும் – இஎம்ஐ பாக்கி உள்ளது என்று எழுதப்பட்டிருந்தது.
View this post on Instagram
நடுத்தர வர்க்க மக்களின் அன்றாட நிதிச் சிக்கல்களைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்த இந்த வாசகம் பார்ப்பவர்களைச் சிரிக்க வைத்த அதே வேளையில் பலரைச் சிந்திக்கவும் வைத்துள்ளது. கடன் சுமையில் இருக்கும் சாமானிய மக்களின் எதார்த்த நிலையை நகைச்சுவையுடன் வெளிப்படுத்தியதே இந்த வீடியோ இவ்வளவு வேகமாகப் பரவக் காரணமாக அமைந்தது.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவை இதுவரை ஐந்து கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இதனைப் பார்த்த பயனாளர்கள் பலர் இது சிரிப்பை வரவழைத்தாலும் இதற்குப் பின்னால் ஒரு சோகம் கலந்த உண்மை மறைந்திருப்பதாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வங்கிக்கு உண்மையாக இருப்பவர் என்றும் இந்தியா ஒருபோதும் ஆரம்பக் கால நிலையில் உள்ளவர்களுக்கானது அல்ல என்றும் பலரும் கிண்டலாகப் பதிவிட்டு வருகின்றனர். முன்னதாகத் தமிழ்நாட்டிலும் இது போன்ற ஒரு கார் ஸ்டிக்கர் வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது. மன அழுத்தம் நிறைந்த இன்றைய வாழ்க்கைச் சூழலில் இது போன்ற சிறு நகைச்சுவைகள் மக்களுக்கு ஒரு கணம் புன்னகையைத் தருகின்றன.
