டெல்லி மெட்ரோ ரயிலில் வைரலாக வேண்டும் என்றால் நடனம், சண்டை அல்லது அபத்தமான செயல்கள் அவசியம் என்ற எண்ணத்தை உடைத்துள்ளார் இளைஞர் ஒருவர். எந்த விதமான சத்தமுமின்றி, எந்த அசைவுமின்றி நின்றபடியே சமூக ஊடகங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளார் ராகவ் சர்மா என்ற இளைஞர்.

டெல்லி மெட்ரோ ரயில் பெட்டிக்குள் பயணிகள் கூட்டம் நிறைந்த நிலையில், கைப்பேசி கேமராவை கையில் பிடித்துக்கொண்டு சிலை போல அசையாமல் நின்ற இளைஞரின் காணொளி தற்போது வைரலாகி வருகிறது. அவர் பேசவில்லை, நடனமாடவில்லை, எந்த செயலும் செய்யவில்லை. ஆனால் அந்த ஆழ்ந்த மௌனமும், அசையாத தன்னம்பிக்கையும் கோடிக்கணக்கான இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Raghav sharma (@miracletom25)

இந்த காணொளியின் சிறப்பு அந்த இளைஞரின் மௌனம் மட்டுமல்ல; அவரைச் சுற்றி நின்ற பயணிகளின் குழப்பமான எதிர்வினைகளும் தான். சிலர் கேமராவை பார்த்து, “நல்லா இருக்கியா?”, “வீடியோ எடுக்குறப்போ ஏன் எதுவும் சொல்லல?” என்று கேட்பது போல் தோன்றும் காட்சிகள் காணொளியில் இடம் பெற்றுள்ளன.

@miracletom25 என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த ‘அமைதியான’ வீடியோ, சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இந்த வீடியோ 1.4 கோடி முறைக்கும் அதிகமாக பார்க்கப்பட்டுள்ளதுடன், 8.83 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விருப்பம் தெரிவித்துள்ளனர். மேலும், 17 ஆயிரத்துக்கும் அதிகமான கருத்துகள் பதிவாகியுள்ளன.

இளைஞரின் தன்னம்பிக்கையை பாராட்டி பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். “சகோதரரின் தன்னம்பிக்கை மிக உயர்ந்தது; இதைச் செய்யும்போது அவர் சிரிக்கக்கூட இல்லை” என ஒருவர் பதிவிட்டுள்ளார். மற்றொருவர், “அவர் இப்போது பேசுவார் என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் அதுவே இந்த வீடியோவின் பலம்” என குறிப்பிட்டுள்ளார்.

மௌனமும் ஒரு வலிமையான மொழி என்பதை நிரூபிக்கும் வகையில், இந்த வீடியோ தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.