டெல்லி மற்றும் நோய்டாவை உலுக்கியுள்ள இந்தச் சம்பவம், 15 வருட கால காதலில் ஏற்பட்ட விரிசலால் நடந்த கொடூர கொலையாகப் பார்க்கப்படுகிறது. டெல்லி திரி லோக்புரியைச் சேர்ந்த 32 வயது இளைஞர், தனது 26 வயது காதலியை காரிலேயே சுட்டுக் கொன்று விட்டு, தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். சனிக்கிழமை காலை நோய்டாவின் செக்டார் 107 பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் ரத்த வெள்ளத்தில் இவர்களது சடலங்கள் மீட்கப்பட்டன.
அந்த இளைஞரின் கையில் துப்பாக்கி இருந்ததால், அவரே முதலில் பெண்ணைச் சுட்டுவிட்டு பின் தன்னைத் தானே மாய்த்துக் கொண்டது தெரியவந்துள்ளது. இந்த இளைஞர் வாட்டர் பிளான்ட் பிசினஸ் செய்து வந்துள்ளார். அந்தப் பெண்ணை கடந்த சில ஆண்டுகளாக அலுவலகத்திற்கு அழைத்துச் செல்வதும், வீட்டிற்கு விடுவதும் இவரது வழக்கமாக இருந்துள்ளது. இதற்கிடையில், ஓராண்டுக்கு முன்பு அந்த இளைஞர் திருமணப் பெண் கேட்டுச் சென்றபோது, பெண்ணின் குடும்பத்தினர் சாதி வேறுபாட்டைக் காட்டி மறுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் அந்தப் பெண்ணுக்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த காதலன், “என்னையும் கொன்றுவிட்டு, அவளையும் கொன்றுவிடுவேன், அவள் என்னைத் ஏமாற்றிவிட்டாள்” எனத் தனது குடும்பத்திற்கு வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பிவிட்டு இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். இந்தக் காதல் ஜோடியின் சோக முடிவு இப்போது சமூக வலைதளங்களில் விவாதமாக மாறியுள்ளது.
