சமீபத்தில் நிறைவடைந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான (U-19) உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் 175 ரன்கள் குவித்து இந்தியாவிற்கு 6-வது முறையாக மகுடம் சூட்டிய இளம் நட்சத்திரம் வைபவ் சூர்யவன்ஷி, தற்போது தனது 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதத் தயாராகி வருகிறார்.

பிஹார் மாநிலம் சமஸ்திபூரில் உள்ள போதார் இன்டர்நேஷனல் பள்ளியில் பயிலும் 14 வயதேயான வைபவ், வரும் பிப்ரவரி 17-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள பொதுத்தேர்வில் பங்கேற்கிறார்.

 

இது குறித்து அந்தப் பள்ளியின் முதல்வர் நீல் கிஷோர் செய்தியாளர்களிடம் கூறுகையில்: கிரிக்கெட் உலகில் வைபவ் ஒரு பெரிய நட்சத்திரமாக இருக்கலாம். ஆனால், பள்ளி என்று வரும்போது அவர் ஒரு மாணவர் மட்டுமே. அவருக்கு என்று தனிச்சலுகைகள் எதுவும் வழங்கப்படாது. அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படும் அதே வசதிகள் மற்றும் பாதுகாப்புதான் அவருக்கும் வழங்கப்படும். இது கிரிக்கெட் பிட்ச் அல்ல, கல்விக்கான பிட்ச். அவர் தனது ஹால்டிக்கெட்டைப் பெற்றுக்கொண்டார்,” எனத் தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களாக வைபவ் சூர்யவன்ஷி படைத்த சாதனைகள் மலைக்க வைக்கின்றன. குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் வெறும் 80 பந்துகளில் 175 ரன்கள் விளாசினார். இதில் 15 சிக்ஸர்கள் அடங்கும். ஒட்டுமொத்தத் தொடரில் 30 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு, தென் ஆப்பிரிக்காவின் டெவால்ட் பிரெவிஸின் சாதனையை முறியடித்தார்.

2025 மெகா ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ₹1.1 கோடிக்கு வாங்கப்பட்ட இவர், ஐபிஎல் வரலாற்றில் சதம் அடித்த மிக இளம் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். 206 ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடி அனைவரையும் வியக்க வைத்தார்.

சையத் முஷ்டாக் அலி மற்றும் விஜய் ஹசாரே தொடர்களிலும் மிக இளம் வயதில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையைத் தன்வசப்படுத்தியுள்ளார்.

மைதானத்தில் அதிரடி காட்டி வந்த வைபவ், தற்போது தனது கவனத்தைப் புத்தகங்கள் பக்கம் திருப்பியுள்ளார். உலகக்கோப்பை நாயகன் தேர்வு எழுத வருவது சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.