டி20 உலகக் கோப்பையின் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் இன்று கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
பாகிஸ்தான் அணியின் துருப்புச் சீட்டாகக் கருதப்படும் சுழற்பந்து வீச்சாளர் உஸ்மான் தாரிக்கை எதிர்கொள்வது குறித்து அவர் சுவாரஸ்யமான பதில்களை அளித்துள்ளார்.
பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா, உஸ்மான் தாரிக்கை இந்திய அணிக்கு எதிரான முக்கிய ஆயுதமாக முன்னிறுத்தியுள்ளார். இது குறித்து சூர்யகுமார் கூறுகையில்:
“உஸ்மான் தாரிக் என்பவர் தேர்வறையில் கேட்கப்படும் ‘அவுட் ஆஃப் சிலபஸ்’ (பாடத்திட்டத்திற்கு வெளியே உள்ள) கேள்வி போன்றவர். ஆனால், அதற்காக நாங்கள் சரணடையப் போவதில்லை. அவரை எதிர்கொள்ளத் தேவையான அனைத்துத் திட்டங்களுடனும் நாங்கள் தயாராக உள்ளோம் என்றார்.
இதற்கிடையே, ஐசிசி வெளியிட்ட சமூக வலைதள வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், உஸ்மான் தாரிக் பந்துவீசும் போது சில நொடிகள் உறைந்து நின்று பந்துவீசுவதைப் போலவே, வலைப்பயிற்சியில் சூர்யகுமார் யாதவ் பந்துவீசி அபிஷேக் சர்மாவுக்குப் பயிற்சி அளித்தார். இதன் மூலம், உஸ்மானின் விசித்திரமான பந்துவீச்சு முறையை இந்திய பேட்டர்கள் ஏற்கனவே கணித்துவிட்டனர் என்பது உறுதியாகியுள்ளது.
View this post on Instagram
பாகிஸ்தான் கேப்டனின் கருத்துகளுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகப் பேசிய சூர்யா, “சல்மான் அலி ஆகா விரும்பினால், நாளை நிச்சயம் அபிஷேக் சர்மாவை விளையாட வைப்போம்” என நகைச்சுவையாகத் தெரிவித்தார். மேலும், பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்குவது குறித்த சஸ்பென்ஸை போட்டிக்குப் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்றும் கூலாகப் பதிலளித்தார்.
மேலும் இந்த உலகக் கோப்பை போட்டியில் இதுவரை இந்தியா மோதிய இரு போட்டிகளிலும் வெற்றி அடைந்ததால் இந்த போட்டியிலும் வெற்றி பெறும் என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள்.
