ஒடிசா மாநிலம் ஜகத்சிங்பூர் மாவட்டம் பனாஷ்பரா பகுதியில் அமைந்துள்ள ஒரு மடத்தில் பணிபுரிந்து வந்த சகோதரர்கள் இருவர், அதே பகுதியில் வசித்து வரும் 15 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அவர்களது ஆசைக்கு இணங்க மறுத்த சிறுமியை தொடர்ந்து மிரட்டியதுடன், பலமுறை பலாத்காரம் செய்துள்ளனர். இந்த கொடூரத்தால் மனஉளைச்சலுக்குள்ளான சிறுமி, பயத்தில் இந்த விவரங்களை தன்னுடைய பெற்றோரிடம் தெரிவிக்காமல் இருந்துள்ளார்.

தொடர்ந்து வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி, பின்னர் கர்ப்பம் அடைந்தார். கர்ப்பம் 5வது மாதத்தை கடந்ததாக அறிந்த சகோதரர்கள், இது தங்களுக்கு பிரச்சனையாக மாறும் எனக் கருதி, சிறுமியை உயிருடன் புதைக்க முடிவு செய்துள்ளனர்.

சிறிதும் இரக்கமின்றி, அந்த முயற்சியை செயல்படுத்த முயன்ற நிலையில், சிறுமி தப்பித்து வந்துள்ளார். பின்னர், பெற்றோரிடம் அழுதுகொண்டே  சிறுமி, முழு சம்பவத்தையும் கூறியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட சகோதரர்கள் இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், குற்றச்செயலில் அவர்களுடன் உடந்தையாக இருந்த மூன்றாவது நபர் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

பாலியல் வன்கொடுமை, சிறுமியை கர்ப்பமாக்கல், பின்னர் உயிருடன் புதைக்க முயற்சி போன்ற கொடூர சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்ததை தொடர்ந்து, ஜகத்சிங்பூர் மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.