உலகம் முழுவதும் பருவநிலை மாற்றம் காரணமாகப் பருவகாலங்கள் மாறி மாறி மக்களை வாட்டி வதைத்து வருகிறது. அந்த வகையில், தற்போது ஐரோப்பிய நாடுகளான இத்தாலி மற்றும் ஜெர்மனியில் வழக்கத்திற்கு மாறாகக் கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. அங்குள்ள பல நகரங்களில் வெயிலின் தாக்கம் ஏற்கனவே 40 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை எட்டி, மக்களை வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவிற்கு முடக்கியுள்ளது.
இந்த அதீத வெப்பத்தின் காரணமாக, அங்குள்ள சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள போக்குவரத்து சிக்னல் விளக்குகள் (Traffic Lights) அந்த வெப்பத்தைத் தாங்க முடியாமல் உருகித் தொங்குவதாகச் செய்திகள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இணையத்தில் பார்ப்போரைக் கண் கலங்க வைக்கும் இந்த விசித்திர நிகழ்வு, அங்குள்ள வெயிலின் தீவிரத்தை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.
கோடைக்காலத்தின் உச்சகட்ட வெப்ப அலைகளால், போக்குவரத்து விளக்குகளின் பிளாஸ்டிக் பாகங்கள் தாங்க முடியாமல் உருகத் துவங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழல், பருவநிலை மாற்றத்தின் ஆபத்தை உலகிற்கு உணர்த்துவதோடு, எதிர்காலத்தில் நாம் எதிர்கொள்ளவிருக்கும் பெருஞ்சிக்கல்களையும் முன்னிறுத்துகிறது. இந்த வெப்ப அலைகளின் தீவிரத்தன்மைக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது என மக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
