மகாராஷ்டிரா மாநிலம் தானே – பிவாண்டி சாலையில் டெம்போ டிரைவர் ஒருவர் போக்குவரத்து போலீசாரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தானே மாவட்டத்தில் போக்குவரத்து காவலர் விஜய் சவான், பூர்ணா கிராமம் அருகே சென்று கொண்டிருந்த ஒரு டெம்போ வாகனத்தை நிறுத்துமாறு சைகை காட்டினார்.

ஆனால் டெம்போ ஓட்டுநர் பரேஷ் யாதவ் (வயது 30), காவலரின் அறிவுறுத்தலை புறக்கணித்து தொடர்ந்து வாகனத்தை ஓட்டினார். இதையடுத்து மீண்டும் சைகை காட்டியதும், டெம்போவை நிறுத்திய பரேஷ் யாதவ், காவலரை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, யாதவ் வாகனத்திலிருந்து இறங்கி, காவலருடன் சண்டையில் ஈடுபட்டார்.

சாலையின் நடுவே இடம்பெற்ற இந்த சண்டை, அருகில் இருந்தவர்களால் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த வீடியோ வெளியானதுடன் பொதுமக்கள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்தது. வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் போக்குவரத்து சீரமைப்பில் காவல்துறையின் பணி முக்கியமானது என்பதையும், அதிகாரிகளை ஏமாற்ற முயற்சி செய்வது ஊக்குவிக்கக்கூடாதது என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் பரேஷ் யாதவ் மீது IPC பிரிவுகள் 132 (பொது ஊழியர் மீது தாக்குதல்), 121(1) (காயப்படுத்துதல்), 351(2) (மிரட்டல்) மற்றும் 352 (அவமதித்தல்) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். பரேஷ் யாதவ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டு, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

நீதிமன்றம் அவரை சனிக்கிழமை வரை போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டது. இந்த சம்பவம், சாலைகளில் பொது ஒழுங்கை பாதுகாக்கும் காவல்துறை எதிர்கொள்ளும் சவால்களை வெளிப்படுத்துகிறது.