தாய்லாந்தின் பட்டாயா நகரில் 17 வயதான துஞ்சனோக் தொன்ஹோம்லா என்ற இளம்பெண் நிர்வாண நிலையில், பெட்டி ஒன்றிற்குள் பிணமாக இரயில்வே தண்டவாளம் அருகே கண்டெடுக்கப்பட்டார்.

இந்த கொடூரக் கொலைச் சம்பவத்தில் சந்தேகிக்கப்படும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 46 வயதான சைமன் பீட்டர் கார்மன் என்பவர், பாங்காக் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு தப்பிச் செல்ல முயன்றபோது தாய்லாந்து போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

“>

மேலும் கண்காணிப்பு கேமரா காட்சிகளின்படி, அவரும் அந்த சிறுமியும் ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு ஒன்றாகச் சென்றதும், சில மணி நேரங்களுக்குப் பிறகு அந்த நபர் ஒரு பெரிய கருப்பு நிறப் பெட்டியை மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்றதும் தெரியவந்தது. அவரது உடலில் நகக்கீறல்கள் இருந்த நிலையில், அவர் மீது கொலை, உடலை மறைத்தல் மற்றும் மைனர் சிறுமியை தவறான நோக்கத்திற்காக கடத்துதல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ள சைமன் கார்மன், தன் மீதான கொலைக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். பணத் தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தில், அந்த சிறுமி தன்னை கத்தியால் மிரட்டியதாகவும், அதற்கு தற்காப்பாகவே தான் செயல்பட்டதாகவும் அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் ஊடகங்களில் வெளியான வீடியோ பதிவில், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ள அவர், “உங்கள் மகளுக்கு நடந்த சம்பவத்திற்காக நான் மிகவும் வருந்துகிறேன் ஆனால் அது எனது கட்டுப்பாட்டை மீறி நடந்துவிட்டது.

அதோடு இது நடந்திருக்கக் கூடாது, மற்ற பெண்களும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் இரு நாடுகளிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாய்லாந்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.