இந்தியத் தலைநகர் டெல்லியில் 2026-ஆம் ஆண்டின் முதல் 15 நாட்களிலேயே 807 பேர் காணாமல் போயுள்ளதாகக் காவல்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 509 பேர் பெண்கள் மற்றும் சிறுமிகள் என்பது ஒட்டுமொத்தப் பாதுகாப்புக் கட்டமைப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. ஜனவரி 1 முதல் 15 வரையிலான காலகட்டத்தில் மட்டும் நாளொன்றுக்குச் சராசரியாக 54 பேர் காணாமல் போயுள்ளனர்.
இதுவரை காவல்துறையினரால் 235 நபர்களை மட்டுமே கண்டுபிடிக்க முடிந்துள்ள நிலையில், எஞ்சிய 572 நபர்களின் நிலை என்னவென்று தெரியாமல் அவர்களது குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். காணாமல் போனவர்களில் 191 பேர் சிறார் (Minors) என்பது மேலும் கவலையைத் தூண்டுகிறது. இதில் 146 சிறுமிகளும், 45 சிறுவர்களும் அடங்குவர். குறிப்பாக 12 முதல் 18 வயதுக்குட்பட்ட 169 டீன் ஏஜ் சிறுவர்கள் மாயமாகியுள்ளனர். இவர்களில் 71 சதவீதத்தினரை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது தவிர, 363 பெண்கள் மற்றும் 253 ஆண்கள் என மொத்தம் 616 பெரியவர்கள் மாயமாகியுள்ளனர். டெல்லியில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்துத் தொடர் விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், ஆண்டின் தொடக்கத்திலேயே இத்தகைய அபாயகரமான புள்ளிவிவரங்கள் வெளியாகி இருப்பது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
