ஐபிஎல் 2025 ஏலத்தில் வெறும் 13 வயதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ₹1.10 கோடிக்கு வாங்கப்பட்டு சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி, தற்போது இந்திய சீனியர் அணியில் நுழைவதற்கான தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் 200-க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் சதம் விளாசி அசத்திய இவர், சமீபத்தில் நடந்து முடிந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் ‘தொடர் நாயகன்’ விருதையும் தட்டிச் சென்றார். பீகாரைச் சேர்ந்த வைபவ், அசைவ உணவுகளை (சிக்கன், மட்டன்) விரும்பி உண்பவர் என்றும், ஒரு அமர்வில் சுமார் 1.5 கிலோ வரை சாப்பிடும் வழக்கம் கொண்டவர் என்றும் கூறப்படுகிறது.
ஆனால், சர்வதேச கிரிக்கெட் தரத்திற்குத் தனது உடல் தகுதியை (Fitness) மேம்படுத்த வேண்டும் என்பதற்காக, தற்போது அசைவ உணவுகளைத் முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டு கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
2028 டி20 உலகக் கோப்பையே இலக்கு!
வைபவ் மேற்கொண்டுள்ள இந்த மாற்றம் குறித்துப் பேசிய அவரது தந்தை சஞ்சீவ் சூர்யவன்ஷி, “வைபவ் விரைவில் இந்திய சீனியர் அணியில் இடம் பிடிக்க விரும்புகிறான். குறிப்பாக 2028-ம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதே அவனது இலக்கு. அதற்காகவே தனது உணவுப் பழக்கத்தைக் கட்டுப்படுத்தி, உடல் தகுதியை மெருகேற்றி வருகிறான்” எனத் தெரிவித்துள்ளார்.
ஐசிசி விதிகளின்படி சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட 15 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். வரும் மார்ச் 27-ம் தேதியுடன் வைபவ் 15 வயதை எட்டவுள்ள நிலையில், இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்குப் பிறகு அவர் இந்திய அணியின் நீல நிறச் சீருடையை அணிவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன.
