சென்னை சேப்பாக்கம் மைதானம் என்றாலே ‘விசில் போடு’ என்ற சத்தம்தான் முதலில் நினைவுக்கு வரும். ஆனால், தற்போது அங்கு நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை போட்டிகளில் விசில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ‘விசில்’ சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், இந்தத் தடை விதிக்கப்பட்டது வெறும் தற்செயலானதா அல்லது திட்டமிட்ட அரசியல் நடவடிக்கையா என்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் அனல் பறக்கின்றன.
இது குறித்துத் திருவாரூரில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன், “அதைப் பற்றி நான் இப்போது பேச முடியாது; அந்த விஷயத்தைப் பேச வேண்டாம்” எனத் தவிர்த்துவிட்டார்.
இந்தத் தடை குறித்துத் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (TNCA) விளக்கம் அளிக்கையில், இது மைதான நிர்வாகத்தின் முடிவல்ல என்றும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) வழிகாட்டுதலின்படி ஒலி எழுப்பும் பொருட்கள் (விசில், ஊதுகுழல் போன்றவை) தடை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இருப்பினும், காவல்துறையினர் நுழைவாயிலிலேயே விசில்களைப் பறிமுதல் செய்வது, வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு விஜய்யின் செல்வாக்கை முடக்க எடுக்கப்பட்ட முடிவு எனத் தவெக தொண்டர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
சேப்பாக்கத்தின் அடையாளமான விசிலுக்கே தடை விதிக்கப்பட்டது, சிஎஸ்கே ரசிகர்களையும், அரசியல் வட்டாரத்தையும் ஒருசேரப் பரபரக்க வைத்துள்ளது.
